/* ]]> */
Nov 182011
 

தாயாய் தாங்கும் தாளக்கரை நரசிம்மர்

[Image1]

தாயினும் சாலப்பரிந்து தாங்கும் தாளக்கரை நரசிம்மர்

அண்டத்தையே பிளந்ததுபோல் பேரிரைச்சலுடன், கோடி எரிமலைகள் ஒன்றாக வெடித்ததுபோல் மகாவீர்யத்துடன், கோபக்கனல் கண்களைச் சிவப்பாக்க தோன்றியநரசிம்மத்தின் கர்ஜனை திசைகள் எல்லாம் கடந்து எதிரொலித்தது. நரசிம்ம அவதாரத்தைக் குறிப்பிடும்போது, “திசை திறந்து அண்டம் கீறி சீறிச்சிரித்தது செங்கண் சீயம்!” என புளகாங்கிக்கிறார் கவிச் சக்கரவர்த்திகம்பர். 

இதைவிடஅற்புதமாக நரசிம்ம அவதாரத்தை வர்ணிக்க இயலுமோ? அதனால்தானோ என்னவோ கம்பராமாயண அரங்கேற்றத்தின் போது, அதில் வரும் நரசிம்ம அவதாரப் பகுதியை சபைக்கு கம்பர் கூறும்பொழுது, திருவரங்கத்தில் உள்ள மேட்டழகிய சிங்கர்தானே அதை ஆமோதித்து ஆர்ப்பரித்தார். கம்பராமாயணம் அரங்கேறிய இடமும்மேட்டழகிய சிங்கர் சந்நிதியும் எதிரெதிரே உள்ள அமைப்பை ஸ்ரீ ரங்கநாதர்கோவிலில் இன்றும் கண்டு களிக்கலாம்.

இத்தனை உக்கிரமான நரசிம்ம அவதாரம் இன்னும் சில மணித்துளிகள் நீடித்திருந்தால் சர்வலோகங்களும் மகாபிரளயத்தில் அழிந்ததுபோல தீயிலிட்டசருகாய் பஸ்பமாகியிருக்கும்! ஒரு பச்சிளம் பாலகனைக் காக்க திருஅவதாரம் எடுத்த நரசிம்மமாகத் தோன்றியிருந்தாலும், அவன் தானே மூவுலகங்களையும்காக்கும் கடவுள்! அதனால் தான் தான் வந்த பணியான இரணிய வதத்தை அரங்கேற்றியபின் தன் கோபத்தை விடுத்து கோடி சூரியப் பிரகாசனாய் அன்பர்களுக்கு அருளும் கருணாமூர்த்தியாய்- மகா சாந்த சொரூபியாய்- தன்மார்பில் நித்திய வாசம் செய்யும் திரு மகளுடன் லட்சுமி நரசிம்மராய் அருள்பாலித்தார்.

இத்தகைய லட்சுமி நரசிம்மர் கோவில்கள் இந்தியா முழுவதும் பல இடங்களில் அமைந்துள்ளன.

பலருக்கு அறிமுகமாகாத பிரசித்தி பெற்ற பழமையான லட்சுமி நரசிம்மர் கோவில் ஒன்றைக் காண்போம் வாருங்கள்…

பாடல் பெற்ற சிவ ஸ்தலமான அவிநாசிக்கு அருகில் உள்ளது தாளக்கரை என்னும் திருத்தலம். அவிநாசியில் இருந்து புளியம்பட்டி செல்லும் பிரதான சாலையில் இருந்து விலகி இரண்டு கிலோமீட்டர் பயணித்தால் ஆலயத்தை அடையலாம். 

தாளக்கரை சிறிய- ரம்மியமான கிராமம். ஊருக்கு வெளியே மரங்களால் சூழப்பட்ட அமைதியான இடத்தில் காட்சியளிக்கிறார் லட்சுமி நரசிம்மர். கோவில்சமீபகாலங்களில் புதுப்பிக்கப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சி தந்தாலும், கருவறையில் அருள்பாலிக்கும் லட்சுமி நரசிம்மர் விக்ரகம் பல நூறு ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று ஊர் மக்கள் தெரிவிக்கின்றனர்.

மூலஸ்தானத்தில் நரசிம்மர் கையில் சங்கு, சக்கரத்துடன் சாந்த மூர்த்தியாக சந்திர விமானத்தின் கீழ் அருளுகிறார்.  மூலஸ்தானத்தில் சுவாமி, மகாலட்சுமி இருவருமே நின்ற கோலத்தில் இருப்பது விசேஷமான அமைப்பு. நரசிம்மர் பீடத்தில் ஸ்ரீசக்ரம் உள்ளது. அர்த்த மண்டபத்தில் சாளக்ராமம் இருக்கிறது. இந்த சாளக்ராமமே, முதலில் நரசிம்மராக வழிபடப்பட்டுள்ளது. எனவே இதனை “ஆதிமூர்த்தி” என்கிறார்கள்.

ஆதிமூலவர்

:  

தாயாருடன் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் காட்சியளிக்கும் நரசிம்மரின்அமைப்பு மிக அரிய காட்சியாகும். (இத்தகைய நின்ற கோலத்தில் உள்ள சிறப்பானஅமைப்பு ஆந்திராவில் உள்ள யாதகிரி குட்டாவில் காணலாம்) இங்குள்ளநரசிம்மரையும் தாயாரையும் காண கண்கோடி வேண்டும். நாக்கு வெளியே தொங்கியநிலையில் நரசிம்மர் காட்சி அளித்தாலும், நமக்கு அச்சம் எதுவும்ஏற்படுவதில்லை. மாறாக பக்தியில் பரவசமாகிறது மனம்.

[Gal1]

கருவறையில் காட்சி தரும் கருணாமூர்த்தியைக் கைகூப்பிய வண்ணம் சேவித்துநிற்கிறார் கருடாழ்வார். கம்பீரமும் அழகும் இணைந்த கருடாழ்வார் பணிவுடன் பகவானை வணங்கி நிற்கும் காட்சி, செல்வத்தாலும் கல்வியாலும் உயர்ந்த எவ்வளவு பெரிய மனிதரும் இறைவன் திருவடியைச் சரணடைய பணிவும் அடக்மும் தேவை என்ற தத்துவத்தை உணர்த்துவதுபோல் அமைந்துள்ளது.

[Gal1]

பிராகாரத்தின் வலப்புறமாக விநாயகர் சந்நிதி அமைந்துள்ளது. இங்குள்ளவிநாயகர் அபூர்வமானவர்; வேறெங்கும் காணமுடியாத கோலத்தில் சர்ப்பத்துடன்காட்சியளிக்கிறார். சர்ப்பம் விநாயகருக்குக் குடையாக நிற்பதால் இவர் சர்ப்ப விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். ராகு- கேது முதலிய கிரகங்களால் ஏற்படும் சர்ப்ப தோஷத்தைத் தீர்க்கும் அற்புத மூர்த்தி இவர். இவருக்கு பிரதி ஞாயிறு காலை 9.00 மணி அளவில் தோஷ நிவர்த்திப் பரிகார பூஜைகள் நடைபெறுகின்றன. கிரக தோஷம் உள்ள பக்தர்கள் பெருந் திரளாக வந்து பூஜை செய்து தோஷ நிவர்த்தி செய்து கொள்கின்றனர்.

சர்ப்ப விநாயகர்: பெருமாள் தலங்களில் சுவாமி, ஆதிசேஷன் மீது அமர்ந்த கோலத்தில் இருப்பார். சுவாமி நின்ற கோலத்தில் இருக்கும் தலங்களில், ஆதிசேஷன் அவருக்கு குடையாக தலைக்கு மேலே காட்சி தருவார். இங்கு பிரகாரத்தில் ஒரு விநாயகர் இருக்கிறார். இவரது தலைக்கு மேலே, ஒரு தலையுடன் ஆதிசேஷன் குடையாக காட்சி தருகிறார். இவரை, “சர்ப்ப விநாயகர்” என்று அழைக்கிறார்கள். பெருமாளுக்கான கோயில் என்பதால் இவர் ஆதிசேஷனுடன் காட்சி தருவதாக சொல்கிறார்கள். ராகு, கேது, செவ்வாய் மற்றும் புத்திர தோஷம் உள்ளவர்கள் இவருக்கு திருமஞ்சனம் செய்தும், மஞ்சள் காப்பிட்டும் வேண்டிக்கொள்கிறார்கள். இக்கோயில் ஒரு ஓடையின் கரையில் அமைந்துள்ளது. தாளம் என்றால் ஓடை என்ற பொருள் உண்டு. எனவே தலம், “தாளக்கரை” என்று அழைக்கப்படுகிறது.

சர்ப்ப விநாயகர்

: 

ஒரே கோவிலில் வைணவ அம்சமானநரசிம்மரையும் சைவ அம்சமான விநாயகரையும் காண்பது சிறப்பானது. மேலும்இங்குள்ள வில்வ மரம் மூன்று கிளைகளாகப் பிரிந்து விஷ்ணுவின் நாமம்போல்காட்சியளித்து நம்மை ஆச்சரியப்படுத்துகிறது.

நின்ற கோலத்தில் லட்சுமி. மகாலட்சுமியின் சகோதரனான சந்திரனே இங்கு சுவாமிக்கு விமானமாக இருந்து காப்பதாக ஐதீகம். எனவே மூலவரின் மேல் உள்ள விமானம் சந்திர விமானம் எனப்படுகிறது.

பிராகாரத்தின் இடப்புறத்தில் ராமபக்த அனுமன் பக்தர்களோடு பக்தராக நின்று காட்சியளிக்கிறார்.

[Gal1]

பவுர்ணமி, அமாவாசை, ஏகாதசி, திருவோணம் மற்றும் பிரதோஷ நாட்களில் சுவாமிக்கு விசேஷ வழிபாடு நடக்கிறது. சுவாமி சன்னதி எதிரே கருடாழ்வார் வணங்கியபடி இருக்கிறார். சுவாமி சன்னதியில் எலுமிச்சை, துளசி பிரதான பிரசாதமாக தருகிறார்கள். இதனை வீட்டு பூஜையறையில் வைத்து வணங்கிட வேண்டுதல்கள் நிறைவேறுவதாக நம்பிக்கை.

குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருக, கடன் நீங்க, கோப குணம் குறைய வேண்டிக்கொள்கிறார்கள்.

[Gal1]உற்சவர் லட்சுமி நரசிம்மர்: 

இங்குள்ள நரசிம்மரும் தாயாரும் வரப்பிரசாதிகள். பக்தர்களின் பணிவானவேண்டுதல்களை நிறைவேற்றி அருளி, அவர்களின் இஷ்ட தெய்வமாக விளங்குகிறார் லட்சுமி நரசிம்மர். அதனால் நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் தேனைமொய்க்கும் வண்டுபோல் பெருகி வருகிறது” என்கிறார் அர்ச்சகர்.

இரணியன் என்னும் அசுரனை அழிப்பதற்காக திருமால் எடுத்த அவதாரமே நரசிம்மர். பக்த பிரகலாதனின் தந்தையான இரண்யன், தான் யாராலும் அழிக்க முடியாதபடி வித்தியாசமான வரம் பெற்றிருந்தான். திருமால், நரசிம்ம அவதாரம் எடுத்து அவனை அழித்தார். அப்போது அவர் மிக உக்கிரமாக இருந்தார்.

உக்கிரம் தணிக்க மகாலட்சுமி, அவரது மடியில் அமர்ந்தார். நரசிம்மர் சாந்தமானார். இதன் அடிப்படையில் லட்சுமி நரசிம்மர் கோயில்களில் சுவாமியின் மடியில், மகாலட்சுமி அமர்ந்திருப்பாள். ஆனால், இத்தலத்தில் மகாலட்சுமி, சுவாமிக்கு இடதுபுறம் தனியே இருக்கிறாள். நரசிம்மர், மகாலட்சுமியை இத்தகைய கோலத்தில் காண்பது அரிது.

காலை 7.00 மணி முதல் மாலை 7.00 மணிவரை ஆலயம் திறந்திருக்கும்.

நிர்வாக அதிகாரி, 

அருள்மிகு லட்சுமி நரசிம்மர் கோயில், 

தாளக்கரை – 641654. 

மங்கரசவளையபாளையம், 

சேவூர் வழி, அவிநாசி தாலுகா, 

கோயம்புத்தூர் மாவட்டம்.

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>