ஆசீர்வதிக்கும் ஜகன்மாதா
கிருபாவலம்பநகரீ காசிபுராதீச்வரி
மாதா அன்னபூர்ணேசுவரி பிஷாம்தேஹி!’
என்று “அன்னபூர்ணாஷ்டகத்தில் ஆதிசங்கரர் அன்னையை வேண்டுகிறார்.
உலகத்தில் ஒரு மனிதன் அடையக் கூடிய சகல பாக்கியங்களையும் அடைந்து கரை கண்ட அவதார புருஷரான சங்கரர் அன்னையிடம் பிச்சை கேட்கிறார்.
காசியின் எஜமானியாக விளங்கும் தேவியை
அன்னம் அளிப்பவளாகவும்,
முக்தியைத் தருபவளாகவும்,
சகலசம்பத்துகளையும் அருளுபவளாகவும்,
வெற்றியை அளித்து வாழ்த்தும் மாதாவாகவும்,
கருணையின் வடிவமாக விளங்கும் உலகத் தாயாகவும்
வைத்து வழிபடுகிறார் சங்கரர்.
அந்த உலகத்தாய் தீபாவளியன்று ஒளி வடிவமாகப் பிரகாசிக்கிறாள். நவரத்தினங்களும் இழைத்த அணிகலன்கள் அன்னையின் மார்பில் தவழ்கின்றன; அருள்பாலிக்கும் கரங்களை அலங்கரிக்கின்றன; தண்ணொளி வீசும் மணிமகுடமாகத் திகழ்கின்றன. பொன்னும் மணியும் நவரத்தினங்களும் பூட்டி, பொன் உருவிலேயே ஜகன்மாதாவை வைத்துப் பூஜிக்கிறார்கள்.
ஈசனுக்கே உணவளிக்கும் அன்னை தங்கக் கிண்ணமும் தங்கக் கரண்டியுமாகக் கொலுவிருக்கிறாள்.
உலகத்தையே ஆளும் மகேசுவரன் அங்கே பிச்சை கேட்டு, உலகத்தாரில் முதல்வனாய் உணவருந்த திருவோடு ஏந்தி நிற்கும் காட்சியைக் காண்கிறோம்.
ஆலகாலத்தையும் அமுதமாய் விழுங்கிய எம்பிரானுக்கு அப்படி ஓர் எளிய தோற்றமா? அத்தனை பசியா? ”உலகக் குழந்தைகளைக் காப்பாற்று; அதற்கு ஒரு பாவனையாக எனக்கு உணவு கொடு!’ என்று கேட்கிறார் கைலாசபதி.
அன்னபூரணியின் இருபுறமும் ஸ்ரீதேவியும் பூதேவியும் தங்கத்தில் செய்த விக்கிரகங்களாகத் தரிசனம் தருகிறார்கள். அந்தத் தோற்றம், கையை உயர்த்தி அபயமளித்து ஆசீர்வாதம் கூறும் விதமாகவே இருக்கிறது.
காசி விசுவேசுவரர், வெண்ணீறணிந்த பெருமான்- வெள்ளி மலையமர்ந்த ஈசன் வெள்ளி விக்கிரகமாக ஜொலிக்கிறார்.
காசி விசுவநாதரை நாம் தொட்டுத் தரிசிக்கலாம்; பாலாபிஷேகம் செய்யலாம்; மலர் மாலைகள் சாற்றலாம். அபிஷேகம் செய்த கங்கை நீரையும் பாலையும் பிரசாதமாகப் பெற்று அருந்தலாம். இதில் சாதி- இன வேறுபாடு இல்லை. எல்லாருக்கும் அனுமதி உண்டு.
லட்சக்கணக்கான மக்கள் தரிசித்து இறைவனைத் துதிபாடிய இடம் இது.
அதனால் உள்ளே நுழையும்போதே பக்தி மணக்கிறது.
இப்போதும் நினைவில் அந்தப் புனித உணர்வு அலைமோதுகிறது.
காசி விசுவநாதர் ஆலயத்தில் விடியற் காலை மூன்று மணிக்கு உக்ஷத்கால பூஜையும், பன்னிரண்டு மணியை ஒட்டி உச்சி கால பூஜையும், மாலையில் சந்தியா பூஜையை ஒட்டி சப்தரிஷி பூஜையும் நடக்கின்றன.
நள்ளிரவில் அர்த்தஜாம பூஜையும் நடைபெறு கிறது.
சப்தரிஷி பூஜை மிக விசேஷமானது. ஏழு அந்தணர்கள் சுமார் ஒரு மணி நேரம் சிவ ஸ்தோத்திரம் சொல்லுகிறார்கள். படிப் படியாக சுவாமிக்கு அலங்காரம் செய்கிறார்கள். முதலில் கங்கை நீர், பிறகு பால், சந்தனம், தேன் ஆகிய வற்றினால் அபிஷேகம் நடக்கிறது. அதன்பின் பலவகை மலர்களால் அர்ச்சனை செய்கிறார்கள். அதன்பின் வளையங்களாக மலர் மாலை அலங்காரம். நாகாபரணம் சிவலிங்கத்தின் முடியை அலங்கரிக்கிறது.
ஐந்துமுக விளக்குகளைக் காட்டி, முடிவில் கற்பூர ஆரத்தி எடுக்கிறார்கள். ஏழு அந்தணர்கள் வாழ்க்கையின் ஏழு நிலை களையும், பஞ்சமுக தீபம் ஐம்புலன்களையும் உணர்த்துவதாக, இந்த பூஜையின் தாத்பரியம் சொல்லப்படுகிறது. காசி விசுவநாதரின் பூஜைகளிலேயே இதுதான் மிகவும் முக்கியமானது. தீபாவளியன்று விசுவேசுவரருக்குப் பஞ்சமுக அலங்காரம் செய்து, கவசமாகச் சாற்றுகிறார்கள்.
காசி விசுவநாதர் ஆலயத்திலிருந்து சிறிது தூரத்தில் அமைந்திருப்பது காசி விசாலாட்சியின் ஆலயம். இது தமிழ்நாட்டுப் பாணியில் அமைந்த திருக்கோவில். தீபாவளியன்று விசுவநாதர் ஆலயத்திலும் இங்கேயும் நாதசுர இசை மங்களகரமாக முழங்குகிறது. இங்கே அம்மனுக்கு குங்கும அர்ச்சனை செய்வதுண்டு. தீபாவளியின்போதும் மகா சிவராத்திரியன்றும் தங்க விசாலாட்சி அம்மனைத் தரிசிக்கலாம்.
காசியில் தீபாவளியன்று விசேஷமான அலங்காரங்களுடன் எழுந்தருளுவது அன்னபூரணி. அன்று அன்னபூரணியின் தரிசனத் துக்காக பக்தர்கள் ஆயிரக்கணக்கில் கூடுகிறார்கள். காசியில் விசுவநாதர் ஆலயத்துக்கு இணையாக மிகச் சிறப்புடன் விளங்குவது அன்னபூரணியின் ஆலயம்தான்.
சாதாரண நாட்களில் கருவறையில் அன்னபூரணி அம்மனின் தரிசனம் கதவின் துவாரம் வழியாகவே பக்தர்களுக்குக் கிட்டுகிறது. கருவறைக்கு எதிரே எண்கோண வடிவம் கொண்ட மண்டபம் இருக்கிறது. அங்கே அமர்ந்து பக்தர்கள் பஜனை செய்கிறார்கள். பூஜை நேரத்தில் ஆலயமணி முழங்குகிறது. பசுவின் முகம் கொண்ட இந்த ஆலயமணியின் நாதத்தில் பக்தர்களின் கோஷம் கலந்து ஒலிக்கிறது. கற்பூர ஆரத்தி காட்டி குங்குமப் பிரசாதம் அளிக்கிறார்கள்.
அன்னபூரணியைப் பூஜை செய்து வழிபடும் முதல் நாள் தன திரயோதசி. அன்று தங்க அன்னபூரணிக்குப் பூஜைகள் உண்டு. ஆனால் முழு தரிசனம் கிடைக்காது. திரை போட்டு மறைத்து விடுகிறார்கள். அடுத்த நாள் சோடி தீபாவளி. அன்று தரிசனத்துக்காக சந்நிதியைத் திறந்து வைக்கிறார்கள். தீபாவளியன்று ஐசுவரியங்களை அளிக்கும் தேவியாக விளங்கும் அன்னபூரணிக்கு குபேர பூஜை நடக்கிறது. அன்று கங்கா ஸ்நானம் செய்துவிட்டு ஏராளமான மக்கள்- குறிப்பாக சுமங்கலிகள் தரிசனம் செய்கிறார்கள். அடுத்த நாள் சகலவிதமான தன, தான்ய, சம்பத்துகளை அளிக்கும் தேவிக்கு லட்சுமி பூஜை நடைபெறுகிறது. இப்படி தீபாவளியை ஒட்டி மூன்று நாட்கள் விசேஷமாக தரிசனம் கிடைக்கிறது.
லட்டுகளால் செய்த தேரில் அன்னை பவனி வருகிறாள். அந்த இனிப்பையே பிரசாதமாகவும் வழங்குகிறார்கள். பக்தர்கள் அன்னபூரணிக்கு காணிக்கையை ரூபாய் நோட்டு களாக மழைபோலப் பொழிகிறார்கள்.
தீபாவளிப் பண்டிகையின்போது, மூன்று நாட்களும் காசியில் உள்ள கோவில்களில் திருவிழாக் கோலம் கண்ணைக் கவருகிறது. காசி விசுவநாதர் ஆலயத்திலும், அன்னபூரணி கோவிலிலும் இந்தச் சிறப்பு தனி ஒளியுடன் துலங்குகிறது.
அன்னம் மலைபோலக் குவித்து வைக்கப் படுகிறது. வகை வகையான இனிய பணியாரங்கள் குவியல் குவியலாக வைக்கப்படுகின்றன. எங்கும் பசியாற்றும் உணவு இறைவனின் அருளாகப் பொங்கி நிறைகிறது.
உண்மை தான்- காசியில் அன்ன விசாரமே இல்லை!
அதுவும் தீபாவளித் திருநாளில் துளியும் இல்லை!
சிந்தையில் நீஆட விந்தையில் நான்ஆழ
மந்திரமாய் வந்த வனமோகினீ
சிந்துகவி பாட உன்நினைவில் வாழ
செந்தமிழ் தேன்தந்தாய் ஜகன்மோகினீ !-
வெந்துயர் தீர்ப்பாய் ..அன்னபூரணி….தாயே.. தயாபரி ..அம்மா ,!!
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments