அருளும் குருவும் திருவும்
300வது பதிவு
குருபார்க்க கோடி நன்மை -வியாழன் பார்க்க விரைந்திடும் திருமணம் புண்ணிய குரு பார்க்க புத்திர பாக்கியம் கிட்டும் என்பவை அருமையான அனுபவ மொழிகள்,
குருவும் திருவும் அருட்கடாட்சத்தால் குறைவிலா வாழ்க்கை அருளும்
குருவித்துறை சித்திரவல்லபப் பெருமாள் கோவில் என்னும் எழில்மிகு குருவருட்தலம் மதுரை சோழவந்தான் தென்கரையில் உள்ளது.
குருபகவான், சக்கரத்தாழ்வார் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கின்றனர்.
குரு (வியாழன்) தன் மகனுக்காக வைகை நதிக்கரையில் துறை அமைத்து நாராயணனை நோக்கி தவம் செய்ததால் இந்த இடம் குருவி(ன்)த்துறை ஆனது.
குருவின் தவத்தால் மகிழ்ந்த நாராயணனும் சித்திர வேலைப்பாடுடன் அமைந்த தேரில் சித்திரை மாதம் சித்திரை நட்சத்திர நாளில் வியாழ பகவானுக்கு காட்சி தந்து, கசனை மீட்டு தந்தார். இதனாலேயே இங்குள்ள இறைவன் சித்திர ரத வல்லப பெருமாள் என அழைக்கப்படுகிறார்.
பிறருடைய குணம் அறிந்து செயல்பட்டு தனக்கு வேண்டியதைச் சாதித்துக் கொள்ளும் சித்திரை நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்கின்றனர்
உற்சவர்
குரு பகவானாகிய பிரகஸ்பதிக்கு சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தன்று ஒரு சித்திரத் தேரில் எழுந்தருளி காட்சி தந்தார். எனவே தான் இத்தலம் சித்திரை நட்சத்திரத்திற்குரிய கோயிலாக விளங்குகிறது
தாயார் செண்பகவல்லி
மூலவர்: சித்திர ரதவல்லபப் பெருமாள் சுமார் 10அடி உயரம். அதற்கேற்ற ஆஜானுபாகனாக, சங்கு சக்கரதாரியாக, ஸ்ரீதேவி, பூதேவியுடன் காண்போர் வியக்கும் வண்ணம் காட்சியளித்து அருள்பாலிப்பது விசேஷமான அம்சம். . இவர் சந்தன மரத்தாலான திருமேனி, அபிஷேகம் கிடையாது. மூன்று மாதத்திற்கு ஒரு முறை தைலக்காப்பு சாத்துகிறார்கள். இங்கு இவரை வணங்கினால், குருபகவானின் அருள் தானே வந்து சேரும். புத்திர பாக்யமும், சகல சௌபாக்யமும் வந்து சேரும் என்பது மக்களின் நம்பிக்கை.
மூலவர் சித்திரரத வல்லப பெருமாள்
உற்சவர்: நித்ய ஸ்ரீனிவாசப் பெருமாள். நாச்சியார்களுடன் அருள் பாலிக்கிறார். சக்கரத்தாழ்வார், சேனைமுதலியார், கருடாழ்வார் அருள்பாலிக்கின்றனர்
தாயார்: செண்பகவல்லி. தன் திருக்கரங்களில் மலர் ஏந்தியும், அபயஹஸ்தம், வரதஹஸ்தம் காட்டி நம்மை ஈர்த்தும், மனத்தைக் குளிர வைக்கும் தன்மை கொண்டவள். பிராகாரத்தில் யோக நரசிம்மரும், பன்னிரு ஆழ்வார்களும் கோவில் கொண்டு அருள் பாலித்து வருகிறார்கள்.
ஒரு பெரிய வேப்ப மரமும் உள்ளது.
குழந்தைப்பேறு வேண்டுவோர், மரத்தின் கிளையில்தொட்டில் கட்டிவிட்டால், அவர்கள் விரைவில் தாய்மை அடைவார்கள் என்பது, இன்றும் நடந்துவரும் .அசைக்க முடியாத நம்பிக்கை.
நவக்கிரகத்தில் வியாழன் கிரகம் யோக குருவாக அருள்பாலிக்கிறார்.
நமக்கு குருபெயர்ச்சி பாதிப்பு என்றால் குரு (வியாழன்)விடம் சென்று முறையிடுவோம். அந்த குருவுக்கே பாதிப்பு என்றால் யாரிடம் போய் முறையிடுவார். குருபகவானும் தன் மகன் கசனுக்காக உலக நாயகன் நாராயணனை நோக்கி தவம் செய்த இடம் தான் குருவித்துறை சித்திரரத வல்லபபெருமாள் கோயிலாகும். உலகில் வியாழ பகவானே நாராயணனை நோக்கி தவம் செய்யும் இடம் இந்த திருத்தலம் என்றும் வியாழன் சுயம்புவாக தவக்கோலத்தில் வீற்றிருப்பதும் இங்குதான் என நம்பப்படுகிறது.
அசுர்களின் குரு சுக்ராசாரியார் ‘மிருத சஞ்சீவினி’ என்னும் மந்திரம் கற்றவர். அசுரர்கள் போரில் மாண்டால், இந்த மந்திரத்தின் மூலம் உயிர்பெற்று எழச்செய்து அசுரர்கள் கூட்டம் மிகவும் பெருகியது.
தங்களின் பலத்தைப் பெருக்கவும், அசுரர்களின் கூட்டத்தைக் குறைக்கவும், ‘மிருத சஞ்சீவினி’ மந்திரத்தை தேவர்களும் அறிய விரும்பினர்.
இந்த மந்திரத்தைக் கற்றுவர தேவர்களின் குருவான குருபகவானின் மகனும், யாவரும் கண்டு வியக்கும் அழகுடைய இளைஞனுமான கசனை அனுப்பிவைத்தனர்.
கசன் சுக்ராசாரியாரின் ஆஸ்ரமத்துக்குச் சென்றபோது, எதிர்பாராமல் அவர் மகளான தேவயானியைச் சந்தித்தான். இருவரும் ஒருவருக்கொருவர் காதல் வயப்பட்டனர். அவர் மூலம் சுக்ராசாரியாரைச் சந்தித்து, அவர் அன்பையும், நம்பிக்கையையும் பெற்று அவரிடமிருந்து ‘மிருத சஞ்சீவினி’ மந்திரத்தை உபதேசம் பெற்றான்.
இதை அறிந்த அசுரர்கள், கசன் உயிருடன் இருந்தால் தங்கள் குலத்துக்கு அழிவுகாலம் ஏற்படும் என்பதால், குருவுக்கும் (சுக்ராசாரியார்) தெரியாமல் அவனைக் கொன்று அவன் உடலைக் கொளுத்தி குரு அறியாவண்ணம் அந்தச் சாம்பலை சுக்ராசாரியார் அருந்தும் பானத்தில் கலந்து கொடுத்துவிட்டனர்.
இந்த விவரம் அறியாத சுக்ராசாரியார் பானத்தைக் குடித்துவிட்டார்.
கசன் பலதினங்களாக வராமலிருக்கவே தேவயானி கலக்கமுற்று
தன் தந்தையிடம் கசன் இருக்கும் இடத்தைப் பற்றி அறிந்து சொல்லும்படி வேண்டினாள்.
தன் ஞான திருஷ்டி மூலம் கசன் தன் வயிற்றில் இருக்கிற விவரம் அறிந்து அதிர்ச்சி யடைந்தார். இதை தேவயானியிடம் சொல்லவே தேவயானி மிகவும் வேதனை அடைந்து, அழுதும் புலம்பியும் நின்றாள். இதைக் காண இயலாத சுக்ராசாரியார் தன் மகளுக்காக, மிருத சஞ்சீவினி மந்திரத்தை உச்சரித்து கசனை வெளிக் (உயிருடன்) கொணர்ந்தார்.அந்த மந்திரத்தை கசன் பிரயோகிக்க சுக்ராசாரியாரும் உயிர் பிழைத்தார்.
கசனைக் கண்டதும் தேவயானிக்கு அளவற்ற ஆனந்தமும், அன்பும் ஏற்பட்டது. தன் தந்தையிடம் கசனுக்குத் தன்னை மணம் செய்து வைக்க வேண்டினாள்.
ஆயின் கசனோ, தான் சுக்ராசாரியாரின் வயிற்றிலிருந்து உயிர் பெற்று வந்ததால் அவர் தனக்குத் தந்தை முறையாகும் என்றும் தேவயானி சகோதரி முறையாகும் என்றும் அவள் கோரிக்கையை ஏற்க முடியாதென்று கூறி தன்னை மன்னிக்கும்படி கோரினான்.
காதலுக்கு கண்இல்லை என்பார்கள். அது போல் தேவயானி மிகவும் வெகுண்டு, ஆத்திரம் மேலிட கசனின் கை, கால்களை செயலிழந்து போகும்படி சாபமிட்டாள்.
இந்த விவரம் அனைத்தும் அறிந்த கசனின் தந்தை வியாழபகவான் (குருபகவான்) நாரத முனிவரின் ஆலோசனைப்படி, பூலோகத்துக்கு வந்து வைகையாற்றின் கரையில் அமர்ந்து திருமாலைக் குறித்து தவம் மேற்கொண்டார்.
திருமால் குருவின் தவத்துக்கு மெச்சி, அவரின் வேண்டுகோளின்படி தரிசனம் அளித்தும் கசனின் கால்களில் ஏற்பட்ட நோயை, தன் சுதர்சன சக்கரம் மூலம் நன்முறையில் குணப்படுத்தினார்.
குருவின் வேண்டுகோளின்படி குரு தரிசித்த திருமால் கோவில் கொண்டு பூவுலக மக்களுக்கும் அருள் பாலிக்க ஆரம்பித்தார்.
அன்று முதல் சுதர்சன ஆழ்வாரும், குருபகவானும் தன் எதிரே குடிகொண்டுள்ள பெருமாளைச் சேவித்தவாறு அமர்ந்துள்ளனர்.
சக்கரத்தாழ்வார்-குருபகவான்
இந்த ஆலயத்திற்கு எதிரே பெருமாளின் அருளுக்கும், கருணைக்கும் பாத்திரமான குருபகவானும், சக்கரத்தாழ்வாரும் கோவில் கொண்டு அருள் பாலிக்கிறார்கள். இவர்களை வழிபட்டால் நினைத்தது அனைத்தும் நடக்கும் என்கிறார்கள்.
குரு சன்னதி
இந்தத் தலம் குரு தவம் செய்த இடம். குரு வீற்றிருந்த துறை என இருந்தது. தற்போது இது மருவி குருவித்துறை ஆயிற்று.
ஒவ்வோர் ஆண்டும் குரு பெயர்ச்சியின் போது கடல் அலைபோல் மக்கள் கூடி வழிபடுகிறார்கள் என்பது அந்த “குருவின்” மகிமையை மேன்மைப்படுத்துகிறது. நித்திய பூஜைகளும், மற்ற விழாக்களும் செவ்வனே நடைபெற்று வருகின்றன. இவ்வாறு குருவும் திருவும் அருள்புரியும் அற்புதத்தலம்.
இது மதுரையிலிருந்து சுமார் 32கி.மீ தொலைவில் உள்ளது. இங்கு வியாழக்கிழமை மிகவும் விசேஷம். அன்று திருவிழாக் கோலம் போல் பக்தர்களைக் காணலாம். இது ஒரு பிரார்த்தனைத் தலம். குருவையும், சக்கரத்தாழ்வாரையும், தலத்து எம்பிரானையும் வணங்கினால் சகல நன்மைகளும், புத்திரப்பேறும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
Stream near Kuruvithurai
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments