/* ]]> */
Apr 102013
 

மாணவர் போராட்ட பின்னணியில் யார் ?

மாணவர்கள்  போராட்டமும் இலங்கைத் தமிழர்களும்:

திடமான மனதோடும் தெளிவான திட்டங்களோடும் மாணவர்கள் இலங்கைத் தமிரர்களுக்காக போராட்டங்களை ஆரம்பித்துள்ளனர்.இவர்களை பெருமையோடும், நம்பிக்கையோடும் உலகமே திரும்பிப் பார்க்கிறது இதுவரை வெறும் அரசியல் பிரச்சினையாக இருந்த ஈழப் பிரச்சினை தற்போது மக்கள் பிரச்சினையாகியிருப்பது, எழுச்சிமிகு மாணவர்களின் போராட்டங்களினால்தான்!.சாஃப்ட்வேர் ஊழியர்கள் தொடங்கி ஆட்டோக்காரர்வரை அத்தனை பேரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது இந்த மாணவர் போராட்டம்.பல கிராமங்களில் வீடுகளில் கறுப்புக்கொடி
பறக்கிறது.உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டாம் என சாதாரண மக்களும் ஈழம் பேசுகிறார்கள்.அண்டை நாடுகளையும், அரசியல்வாதிகளையும் நம்பி ஏமாந்துபோன ஈழத் தமிழர்கள் தன்னெழுச்சியாக கிளர்ந்தெழுந்து வீதிக்கு வந்திருக்கும்
மாணவர்களை பெரிதும் நம்ப ஆரம்பித்து விட்டார்கள்.இந்தப் போராட்டம் தன்னலமும் பயமும் அறியாத மூன்று மாணவர்களால் தலைமையேற்று நடத்தப்படுகிறது.சிபி, கணேசன்,கயல்விழி என்பவர்களே அந்த மூவராவார்.
சிபி என்பவரின் பின்னணி என்ன?’தமிழ் ஈழ விடுத்லைக்கான மாணவர் கூட்டமைப்பு’ என்ற அமைப்பை நிறுவி மாணவர் போராட்டங்களை ஒருங்கிணைத்து வரும் சிபி பாளையங்கோட்டையைச் சேர்ந்தவர்.இவர் சென்னையில் ஒரு கல்லூரியில் இளங்கலை வரலாறு படிக்கிறார்.அப்பா லேனாகுமார் பதிப்பகம் நடத்துகிறார்.அம்மா சாந்தி பேராசிரியை.குடும்பத்தில் எல்லோரும் தமிழ் உணர்வாளர்கள்.பள்ளியில் படிக்கும்போதே ஈழத்துக்கான போராட்டங்களில் கலந்துகொள்வார்.கல்லூரிக்கு வந்த பிறகு ‘நாம் தமிழர்’ ‘மே 17 இயக்கம்’சார்பா நடக்கிற போராட்டங்களில் கலந்துகொண்டுள்ளார்.  கொடுமைப்படுத்தப்பட்ட பலச்சந்திரனை தன்னுடைய தம்பி என எண்ணும் இவர் அவருக்கு நேர்ந்த சித்ரவதைகள் இவரது நெஞ்சை உலுக்குவதாகக் கூறுகிறார்.இதுக்கு மேலும் அமைதி காப்பது தனக்குத் தானே செய்துகொள்ளும் துரோகம் எனக் குமுறுகிறார். இவருடைய உணர்வுக்குத் தகுந்த மாதிரி லயோலாக் கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதத்தை ஆரம்பிக்கவும், அதைத்  தூண்டுகோலாக எடுத்துக்கொண்டு தன் பங்குக்கு போராட்டங்களில் மாணவர்களை ஈடுபடுத்தினார். மாணவர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஃபேஸ் புக், ட்விட்டர், கூகுள் முதலிய இணைய தளங்களைப் பயன்படுத்திக்கொண்டார்.

இனி கணேசன் என்பவரின் பின்னணியைப் பற்றிப் பார்ப்போம்.’ஈழத் தமிழரின் தன்னுரிமைக்கான மாணவர் முண்ணனி’என்ற அமைப்பை உருவாக்கி,போராட்டங்களை நடத்தி வருகிறார்.இவர் செஞ்சியை அடுத்துள்ள
மேல்கொத்தப்பாக்கத்தைச் சேர்ந்தவர்.விமான நிலைய முற்றுகை, சத்யமூர்த்திபவன் முற்றுகை ராணுவ அகாடமி முற்றுகை என அடுத்தடுத்த அதிரடிகளால் போராட்டத்தின் கோணத்தை அரசியல்மயமாக்குகிறார். வெறும்
போராட்டங்களில் மட்டும் ஈடுபடுபவர் அல்ல. படிப்பிலும் ஜொலிக்கிறார். ப்ளஸ்2 வில்  மாநில அளவில் இரண்டாமிடத்தைப் பிடித்தவர். மாநிலக் கல்லூரியில் எம்.ஃபில் முடித்திருக்கிறார்.சமச்சீர் கல்விக்காக நடந்த
மாணவர் போராட்டங்களிலும் கலந்துகொண்டுள்ளார்.முள்ளிவாய்க்கால் முற்றுகையின்போது 5000 மாணவர்களைத் திரட்டி மாபெரும் மறியல் போராட்டம் நடத்தியவர்.

அடுத்ததாக கயல்விழி. இவர் பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் பேத்தி. சட்டம் படித்துள்ள கயல்விழி தொடர்ந்து ஈழப் பிரச்சினைக்காக குரல் கொடுப்பவர்.போருக்குப் பிந்தைய ஈழத்தின் உண்மைச் சூழலை அறியச் சென்ற தருணத்தில் இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்டு , இந்தியா கொடுத்த அழுத்தம் காரணமாக விடுவிக்கப் பட்டவர்.பேரணி, ஆர்ப்பாட்டம், தொடர் முழக்கம் என ஓடி ஓடி மாணவர்களை உற்சாகப் படுத்திவரும் கயல்விழி ‘மாணவர்களின் போராட்டம் சாதாரணமாக ஓயப்போவதில்லை என்கிறார்.இவர் மேலும் கூறுவது  என்னவென்றால்,’முத்துக்குமார் மரணத்தின்போதும் 3 பேர் தூக்குத் தண்டனைவிவகாரத்திலும் மாணவர்கள் மிகுந்த
எழுச்சியோடு வீதிக்கு வந்தார்கள் அதே எழுச்சிதான் இப்போது இங்கு தெரிகிறது. தமிழகத்தின் அரசியல் சூழலும் அதற்கான அவசியத்தை உருவாக்கியிருக்கிறது.மாணவர்கள் கொடுத்த அழுத்தமே இன்று இந்திய அரசியலில் பல மாற்றங்களை உருவாக்கியிருக்கிறது.’ என்பது கயல்விழியின் நம்பிக்கை.

இந்தப் போராட்டங்களைச் செம்மையாக நடத்த வேண்டி, முதல்கட்ட இரண்டாம் கட்ட ஒருங்கிணைப்பாளர்களை  நியமித்தார்கள்.போராட்ட வழிமுறைகளும் கொள்கைகளும் தீவிரமா விவாதித்து முடிவு செய்யப்பட்டது. எல்லோரும் ஒரு விஷயத்தில் தெளிவாக இருந்தார்கள். எக்காரணம் கொண்டும் அரசியல்வாதிகளை போராட்டங்களில் அனுமதிப்பதில்லை.கோரிக்கை நிறைவேறும்வரை போராட்டங்களை நிறுத்துவதில்லைஎன்ற உறுதியோடு நடத்துகிறார்கள். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆறு முதல் ஏழு கல்லூரிகள் போராட்டத்தை முன்னெடுக்கிறார்கள் ஒவ்வொரு கல்லூரிக்கும் ஒரு ஒருங்கிணைப்பாளர் நியமித்திருக்கிறார்கள்.

இவர்களது கோரிக்கைகள் போராட்ட நிபந்தனைகளாகின்றன. சர்வதேச பார்வையாளர்கள் முன்னிலையில் ஐ.நா. ஒரு பொது வாக்கெடுப்பை நடத்தணும்.சர்வதேச நீதிபதிகள் அடங்கிய விசாரணைக்குழு முன்பு ராஜபக்ஷேவை நிறுத்தவேண்டும்.இதுவே போராட்டக்காரர்களின் கோரிக்கை.போராட்டம் ஜெனிவாவோடு நிறைவடையாது.அனைத்துக் கல்லூரி ஒருங்கிணைப்பாளர்களின் ஆலோசனைக்  கூட்டத்தை விரைவில் நடத்தி,. அதில்தான அடுத்தகட்டப் போராட்டம் பற்றி முடிவெடுப்பார்கள்.இலக்கு தமிழ் ஈழம். அதை அடையாமல் போராட்டம் முடியாது, என்று ஆவேசமாகச் சொல்கிறார், சிபி.

கணேசனின் ஆதங்கம் என்னவென்றால், ஐ.ஏ.எஸ் கனவோடு சென்னை வந்த இவர், அதற்காகவே அரசியல் அறிவியல் எடுத்துப் படித்தார்.ஆனால் இவர் படித்த நீதிமன்றம் , சட்டம், அரசியலுக்கும் யதார்த்தத்துக்கும் தொடர்பில்லை என்று விரக்தியாகிறார்.ஐ.ஏ.எஸ் ஆனால் மக்களுக்கு சேவை செய்ய முடியாது. கார்ப்பொரேட்டுக்கும் அரசாங்கத்துக்கும் மட்டுமே சேவை செய்ய முடியும் என்பதை உணர்ந்துகொண்ட இவர் ஐ.ஏ.எஸ் கனவை விட்டுவிட்டார்.மாணவர்களை அரசியல்மயப்படுத்தவேண்டும் என்பது இவரது நோக்கம்.ஆனால் மாணவர் போராட்டங்களை மழுங்கடிக்கும் முயற்சிகள் இங்கு தொடர்ந்து நடக்கிறது.அதைக் கடந்து மாணவர்கள் இப்போது இணைந்திருக்கிறார்கள்.

ஐ.நா. தீர்மானம் ஒரு வெத்துவேட்டு என்பதில் மாணவர்கள் தெளிவாக இருக்கிறார்கள். அமெரிக்காவால் ஆகப்போவது ஒன்றுமில்லை. கால்வைக்கும் இடத்தை எல்லாம் அந்நாடு பிணக்காடாக மாற்றிவிடும். இந்தியாவும் அமெரிக்காவின் வழியில் பேட்டை தாதாவாக முயற்சிக்கிறது.இரண்டாம் உலகப் போர்முடிவுற்ற பிறகு ஒரு சர்வதேச
நீதிமன்றம் அமைக்கப்பட்டு கோயபல்ஸ் உள்ளிட்ட பலருக்கு தண்டனை வழங்கப்பட்டது.அதைப்போலவே, ராஜபக்ஷே, ராஜபக்ஷேவின் தம்பிகள் தளபதிகள் அனைவரையும் கூண்டில் ஏற்ற வேண்டும்.ஈழத்துக்கான பொது வாக்கெடுப்பும்
வேண்டும். இவை நிறைவேறும்வரை போராட்டம் தொடரும் என்கிறார்கள்.

தற்போதைய போராட்டத்தை யாரும் சாதாரணமாக நினைத்துவிட முடியாது.பெரிய சாதனையான தமிழ் ஈழத்தைப் பெற்றுத் தந்தே தீரும் என்கிறார்கள். 1960களில் நடந்த இந்தித் திணிப்புக்கு எதிராகவும், 1980களில் ஈழத்துக்கு ஆதரவாகவும் நடந்த மாணவர்கள் போராட்டங்கள் மிகப் பெரும் மாற்றங்களுக்கு வழிவகுத்தன.தற்போதைய போராட்டமும் அப்படியான ஒரு முடிவை எட்டும் என்கிறார்கள்.ஈழமக்களின் துன்பங்களுக்கான விடியல் குரல்
தமிழகத்தில் உருவாவதை சர்வதேச சமூகம் பெருமையுடன் பார்க்கிறது.. இழந்தவையெலாம் திரும்பக் கிடைக்காவிட்டாலும் , இருப்பதையாவது காப்பாற்ற முடியுமா? தனித் தமிழ் ஈழம் மலருமா எனும் கனவு மின்னாத கண்களே இல்லை!

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

Sorry, the comment form is closed at this time.