/* ]]> */
Jan 262011
 

ஹைக்கூ –மிகச் சில வார்த்தைகளில், மிகச் சிறப்பான செய்திகளைச் சொல்லும் கவிதை என்பது தான் சராசரி வாசகன் ஹைக்கூ பற்றி அறிந்தது…அதுவும் கூடத்தான் என்பதோடு, ஹைக்கூ புரிய வேண்டுமென்றாலே ஜென் தெரிய வேண்டும் ,ஹைக்கூ எழுத நுண்ணிய ஞானமும் தெளிவும் வேண்டும். பருவங்களை , காட்சிகளை , எளிய குறியீடுகளைக் கொண்டு கண நேர அனுபவத்தைச் சொல்லி ஜென்னின் அடிப்படைத் தத்துவங்களைப் பிரதிபலிப்பது.

இவ்வாறான பல ஹைக்கூ கவிதைகளை எடுத்து மிகச் சிறப்பாக எளிய வாசகனுக்கும் புரியும் வண்ணம் அருமையாக விளக்கமும் எழுதியிருக்கிறார் இறையன்பு. கவிதை ஆர்வலர்கள் அவசியம் படித்தே ஆகவேண்டிய புத்தகம் இது..எனக்கு மிகவும் பிடித்த தலைப்பின் கீழ் உள்ள சில வரிகளைப் பகிர்ந்து கொள்கிறேன்.

இரவும் நிலவும்

இரவல் இசையும்

“இரவும் நிலவும்

என் அண்டைவீட்டுக்காரர்

புல்லாங்குழல்-

அபஸ்வரத்தில் .”

மனிதன் எதையுமே முழுமையாக ரசிப்பதில்லை. இனியவை அனைத்தையும் ஒரு சேரப் பருகத் துடிக்கிறான். இளநீரைப் பறிக்கத் தென்னையையே சாய்க்கிறான்—மாங்கனியைப் பறிக்க மரக்கிளையையே முறிக்கிறான்.

அவனுக்கு அனைத்திலும் குரூரத்துடன் கூடிய ஆசை— அனைத்து இனிமைகளையும் அடுத்தவர்கள் தட்டிப் பறிக்குமுன் தான் மட்டுமே அள்ளி விழுங்க வேண்டும் எனும் பேரவா—சாப்பிடும் போதும் சரி–பருகும் போதும் சரி–அவன் வன்மம் அப்பட்டமாக வெளிவருகிறது– அவனால் தன் ஏக்கத்தைக் கூட விழிகளுக்குள் திணித்து மறைக்க முடிவதில்லை. அவனால் தனித்தனியாகப் பிரித்து ரசிக்க முடியாததினாலேயே எந்த ருசியுமே சரியாக இறுதிவரை அவனுக்குத் தெரியாமலேயே போய்விடுகிறது–

குளிரில் கனல் மூட்டிக் கொள்கிறான்–கோடையில் குளிர் சாதனம் கோருகிறான்–இருப்பதில் இருப்பதில்லை அவனுக்குத் திருப்தி; இல்லாததை உருவாக்குவதில் அவனுக்கு எப்போதும் போட்டி. விளக்கு இருட்டைத் தேடுவதாக இருந்தால் சரி இருட்டை விலக்குவதாக இருக்கும் போது மட்டுமே தொல்லை எல்லையை மீறுகிறது

இரவும் நிலவும்

என் அண்டைவீட்டுக்காரர்

புல்லாங்குழல் –

அபஸ்வரத்தில்” கோஜோ

ஆங்கில மொழிபெயர்ப்பை வாசிக்க விரும்புபவர்களுக்கு :

night ,and the moon

my neighbour, playing on his flute -

out of tune! -kojo

இரவு முழுமையாக இருப்பதால் தான் நிலவு அழகாக இருக்கிறது-

எப்போது போர் கடுமையாக இருக்கிறதோ அப்போதுதான் வெற்றி மகிழ்ச்சியாக இருக்கும்-

அசாத்தியமான வெற்றியை கைகளுக்குள் கொண்டு வரும் போது தான் மனதில் இனிமை வழியும்-

நிலவுக்கு இருக்கும் அழகிற்கு இருட்டுதான் மூலகாரணம்–இருட்டு தீவிரமடைய தீவிரமடையத்தான் நிலவின் நுட்பமான கிரணங்கள் சிலிர்க்க வைக்க முடியும் –கோஜோ சொல்லும் நிலவு நிச்சயம் முழுநிலவாகத் தான் இருக்க முடியும்-கவிதையை வாசிக்கும் போது -

“மலைக்கான நெடிய பயணம் மலையுச்சியிலிருந்து தொடங்குவதைப் போல” நம் இலட்சியம் நிலவு என்றதும் பௌர்ணமியிலிருந்து தொடங்கட்டும்–

நிலவின் அழகு இரவின் நிசப்தத்தில் அடங்கியிருக்கிறது–பகலில் நாம் தேவையில்லாமல் தேய்ந்துகொண்டிருக்கிறோம்–அன்று நிகழ்த்தியவற்றை இரவில் நினைத்துப் பார்த்தால் எவ்வளவு வியர்த்தம் எனத் தெரியும். உதயத்தைக் கவிதைகள் பாடுகின்றன — ஆனால் மனிதன் –சபித்துக்கொண்டேயிருக்கிறான்–அவன் தன் நிம்மதியை இரவின் கருப்பைக்குள் தேடுகிறான். பதற்றமில்லாதபோது நிசப்தமான இரவு–நிர்மலமான நிலவு–உலகமே நின்று போனது போன்ற நிதானம்- அமைதி – நிம்மதி-

வெளிச்சம் தீவிரமாக வேண்டுமெனில் காதுகளை மூடவேண்டும்- இசை தீவிரமாக வேண்டுமெனில் கண்களை மூடவேண்டும்– முழுநிலவு மாதத்தில் ஒருமுறை வாய்த்தாலும் –எத்தனை முழுநிலவுகளை வாழ்நாளில் முழுமையாக ரசித்திருக்கிறோம்–நாம் பிறை கண்டவர்கள்–நிலா கண்டவர்கள் இல்லை–

இன்று மேகங்கள் முந்தானையாய் மூடாத முழுநிலவு –இதை ரசிக்கும் போது எவ்வளவு இனிமையாக வாசித்தாலும் அண்டைவீட்டுக்காரர் புல்லாங்குழல் அபஸ்வரம் தான்–

புல்லாங்குழலை எப்போது வேண்டுமானாலும் வாசிக்கலாம் –முழுநிலவை வசதிபோல் வாசிக்க முடியுமா?

..ஷஹி..

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>