/* ]]> */
Sep 122011
 

விடியறதுக்கு ரொம்ப முன்ன இருந்தே அண்ணி வருவாங்களான்னு பாத்துக்கிட்டே தான் படுத்துக்கெடக்குறேன். அண்ணன் அன்னிக்கு ரொம்ப திட்டிடிச்சுன்னு ரோஷப்பட்டு ‘திருச்சி போகலாம் வா’ன்னு அண்ணி எவ்வளவோ சொல்லியும் மறுத்துட்டது  தப்பாப் போச்சு. நேத்துல இருந்தே மூச்சு முட்டல் ஜாஸ்த்தியா இருக்கு. சும்மாவே அதச்சுக் கெடக்கற மொகத்துல இன்னம் மூக்கு அமுங்கி, தெணறல், ஏதோ மூச்சுங்கிறதுல நெஞ்சுக்கு ஒண்ணும் பங்கேயில்லங்கிற மாதிரி மொகத்தையே தடவி தடவி சரி பண்ண முயற்சி செஞ்சுகிட்டு இருக்கேன். நமக்கெல்லாம் ரோஷம் ஒண்ணு தான் கொறச்சல்.

பொரண்டு பொரண்டு எம்புட்டு நேரந்தான் படுக்க? லேசா சத்தம் கேட்டுட்டாலும் அம்மா எளும்பிடுவாங்க. பாவம் இப்ப ரெண்டு வருசமா அவகளுக்கும் தான் நிம்மதியான தூக்கம் ஏது? சின்னவ ஜன்னத்தும் தான் எப்புடி சீரளிஞ்சு போனா? நல்ல மருத்துவ வசதி உள்ள ஊருல நாம பொறந்திருக்கக் கூடாதான்னு நெனச்சுட்டு சிரிச்சுக்கவும் செய்யிறேன்..ஆரோக்கியமான பொண்ணா பொறந்திருக்கக் கூடாதான்னு நெனக்கிறேனா பாரு ன்னு.

இந்தா மாடிக் கதவு தொறக்குற சத்தம். மெல்ல யோசிச்சு யோசிச்சு தேன் அண்ணி தொறக்கும் கதவ. வயசுல சின்னது தான்…ஆனா அண்ணன கட்டிக்கிடுச்சே..பொறவு அண்ணின்டு தான ஆகுது? காலையில குளிச்சு, தலையில கட்டின குத்தாலத் துண்டோட அண்ணிய பாக்க அழகா இருக்கும்.

பெரிய வீடு தான் ஆனா பழைய வீடு. ரூம் வசதியெல்லாம் இல்ல . இப்புடி முடியாம ஹால்ல கெடந்து உருளுறத விட தனியா ரூமுன்னு இருந்தா, மூணாம் பேருக்குத் தெரியாம முக்கி முனகிக்கிட்டாவது கெடக்கலாம். அண்ணி,அடுப்படிய தொறந்துடுச்சு ,இப்ப இங்க வரும் பால் கேன எடுக்க..இந்தா வந்துடுச்சு.

“அண்ணி”..

“ஏங்க ரொம்ப முடியலையா? என்ன எளுப்பியிருக்கலாம் இல்ல? டீ கொண்டு வரவா? என்ன பண்ணுது? அல்லாவே ஏன் இப்புடி கெடக்கீங்க?”

உஷ்ஷுன்னு சாட காமிக்கிறேன்..அதுக்குள்ள அம்மா எளும்பிட்டாங்க. ‘ஏம்மா ஜீனத்து என்ன பண்ணுது’ன்னு அமளி. ஜன்னத்தும் எளும்பிட்டா. அவ்வளவு தான் விக்ஸ் தேச்சு, மடியில சாச்சுன்னு ஒரே அமக்களம்.

அண்ணன் கடைக்குக் கிளம்பவிட்டு டாக்டருக்கு போன் போட்டுச்சு அண்ணி. அது தான் படிச்சதுன்னு அம்மா அததான் பேச சொல்லுவாக. நானும் தான் படிக்கிறேன் காலேஜுல. என்ன பிரயோசனம்? அது தான் முடியாதவளா இருக்கேனே. ‘பத்து மணிக்குள்ளாற வரச்சொல்லிட்டாரு மாமி சிவா டாக்டரு’ ன்னு அண்ணி சொன்னதும் ஒரே பரபரப்பு. இங்க இருந்து போகவே ஒன்ற மணி நேரம் ஆகிடுமே. அப்பறம் ஆட்டோ புடிக்கணும். அதோட போச்சா ஆயிரம் ரூவா வேணும் சொளையா ஒரு நாளைக்கு ஆஸ்பத்திரிக்குக் கட்ட மட்டும். போக வர செலவு தனி.

வாப்பாவுக்கு மட்டும் என்ன நான் சாகட்டும்முன்னா இருக்கும்? காலமெல்லாம் வெளிநாட்டுல கெடந்து சம்பாதிச்ச பணம் இப்புடி அழியிதேங்கிற ஆத்துரத்துல கத்துவாக ஒவ்வொரு தரமும் நான் போறப்ப. ‘இவகளோட மல்லுகட்ட முடியலடீ’ன்னு அம்மா பாவம் பத்து நாளைக்கி முன்ன அண்ணன் கிட்ட காசு கேக்க..அதுவும் ஏதோ கோவத்துல’ நான் மட்டும் தான் ஆம்பளப்புள்ளயா இந்த வீட்டுல’ன்னு சத்தம் போட வீடே எழவு வீடு மாதிரி இருந்துச்சு ரெண்டு மூணு நா. தனிக்குடித்தனம் போனவங்கள எப்புடி வீட்டு ஆளுன்னு எடுக்க முடியும்?

******************************************************************************************************************இந்த

பாயிண்ட் டு பாயிண்ட் பஸ் கெடச்ச வரைக்கும் ரொம்ப சந்தோஷம். சீக்கிரம் போயிருவான். அம்மாடி சாஞ்சிட்டேன் அண்ணி தோளுல. காத்து வேகமா வீசுறத இந்த மூச்சு முட்டல் மட்டும் இல்லாம இருந்தா எவ்வளவோ ரசிக்கலாம். “வண்டிக்காரன் சொந்த ஊரு மதுர” பாட்டு போட்டிருக்கான்..எனக்கு பிடிக்கும் இந்த பாட்டு. சுமா ரங்கனாத் அழகா கழுத்த வெட்டி வெட்டி ஆடுவாங்க. பாக்கவும் கேக்கவும் அழகா இருக்கும். சுமா ரங்கனாத்துன்னு நெனச்ச வுடன புவனா மிஸ் ஞாபகம் வருது. பி.எஸ்.ஸி ஜூவாலஜி படிக்கிறேன். அவுக பாடனி எடுக்குறாங்க. ‘ஜீனத் நீ தான் டிபார்ட்மெண்ட் ஃபர்ஸ்ட். ஆண்டு விழாவுல உனக்கு பரிசு இருக்கு’ன்னு சொன்னாங்க. போக முடியுமா தெரியல.

“ஏம்மா எப்ப வரச் சொன்னேன் சுத்தமா அர மணி லேட். சரி நீங்க ரொம்ப தூரத்துல இருந்து வரீங்கன்னு தானே உங்களுக்காக ஒரு பெட் போட்டே வச்சிருந்தேன். எமர்ஜென்ஸி கேஸ் வந்துடிச்சு. கொஞ்சம் பொறுங்க.”

கொஞ்சம் என்னத்த? இனி நாளு மணி நேரம் ஆகும். காலியா இருந்த ஒரு ரூம்ல உக்காந்தோம் போயி. அண்ணி மடியில சாச்சுக்கிச்சு என்ன.பாவம் அதுவும் வந்த நாள்ல இருந்து இதே தொயரம் தான். என் தலையக் கோதிக்கிட்டே இருந்ததுல லேசா சொக்கி தூங்கிட்டேன்.

சாப்புட எளுப்புது அண்ணி. தயிர் சோறு தான். உப்பில்லாம ..வேற என்ன சாப்புட முடியும்? ரெண்டு வருசமா இதே தான். அன்னாசி ஒரு துண்டு கொண்டு வந்திருந்தது. தின்னு முடிச்சேன். காய்கறியில சாப்பிடலாம்ன்னு உள்ளதையும் அவிச்சு, தண்ணிய வடிச்சு தான் சமக்கணும். சோறு ஒரு கப், காய், ஒரு சில பழங்கள் அதுவும் ஒரு சில துண்டு மட்டும்..கொஞ்சம் போல தயிரு, முட்டையோட வெள்ளக்கரு..இப்புடியே போகுது வாழ்க்க. இதெல்லாம் பரவால்ல..தண்ணிக்கும் அளவு. அததான் தாங்க முடியறதில்ல. அழணும் போல வந்தா.. இத நெனச்சா போதும், அப்புடி அழலாம் மணிக்கணக்கா.

நல்ல வேள இன்னிக்கு ரமா ஸிஸ்டர் தான் இருக்கு. ஜானகி இருந்துச்சுன்னா போச்சு. அது பாட்டுக்கு ரோபோ கணக்கா வரும் டயாலிஸிஸ் மிஷின்ல இருந்து வர ட்யூப ,கதீடர் ல சொருகும் நோயாளிக்கு வலிச்சா என்ன இல்லன்னா என்ன? அப்பறம் முடிஞ்சதும் அதே அலச்சியம்..சர்ருன்னு புடுங்கும் ட்யூப. அதே ரமா ஸிஸ்டரும் தான் இருக்கு. பேஷண்ட்டோட வரவங்க எப்புடி பதறுவாங்களோ அதே பதட்டம் அது கிட்ட இருக்கும். ஆனா  வேலையில பதட்டம் தெரியாது.

ஒண்ணுக்கு போகாம வயிறு, கை, கால், முகம் ன்னு ஒடம்பெல்லாம் வீங்கி விகாரமா இருக்கோமேங்கிற வேதன ஒரு பக்கம், கழிவு வெளியேறாததால ரத்தக் கொதிப்பு அதிகமாகி, நெஞ்சு படபடப்பு, மூச்சு தெணரல், பத்தும் பத்தாததுக்கு ஜொரம், நல்லவிதமா சாப்பிடமுடியாம போறதோட டயாலிஸிஸ் பண்ற ஒவ்வொரு தடவையும் ஏற்படற ரத்த சேதம் காரணமா உண்டாகுற இயலாமை, உள்ள இருந்து ரத்தம் முழுசும் மிஷின் உள்ள போயி ,சுத்தம் ஆகி, திரும்ப ஒடம்புல ஏறணும். இப்புடி பண்ற சில நேரம் ரத்தம் வெளியேறுற ஷாக்குல கடுமையா ஜொரம் வந்து தூக்கி தூக்கி போடும் டயாலிஸிஸ் நடக்கும் போது. நல்ல வேள இன்னிக்கு பெருசா ஒண்ணும் பிரச்சின இல்ல .

இந்த சிறுநீரகம் செயல் இழந்து போற நோயாளிகள் படர அவஸ்தைக்கு சாவு எவ்வளவோ மேல். மனுஷங்களுக்கு எதுஎது மேலயோ பொறாம , எதுக்கெல்லாமோ வேதன. எங்கள கேட்டுப் பாருங்க “தானா ஒண்ணுக்கு போறவங்க மேல தான் எங்களுக்கு பொறாமன்னு” சொல்லுவோம். நேத்து மீந்த பழைய சாதத்துல சுருக்குன்னு உப்பு போட்டு காலையில சாப்பிடறவங்களா நீங்க? அப்ப சிறுநீரக நோயாளிகள் அத்தன பேரோட ஒட்டு மொத்த பொறாமைக்கும் நீங்க தான் இலக்கு.

ஒரு வழியா நாலு மணி நேர டயாலிஸிஸ் முடிஞ்சிது. ‘சிவா சார் கூப்பிட்டு விட்டாரு’ன்னு ரமா ஸிஸ்டர் சொல்லிட்டு போச்சு. இன்னிக்கு மண்டகப்படி காத்திருக்கு. ‘ஏம்மா ஜீனத் ..படிக்கிற புள்ள தான நீ? எத்தன தடவ சொல்றது ஒனக்கு? வாரத்துல 4 தடவ டயாலிஸிஸ் பண்ண வேண்டியிருக்கு ஒனக்கு. கிரியேட்டினின் பாரு 10 ல இருக்கு.  நீ பாட்டுக்கு பத்து நாளக்கி ஒரு தடவ வந்துட்டு போற? அப்பறம் மூச்சு விட முடியல டாகடர்ன்னு யாரையாவது விட்டு போன் பண்ண வக்காத மா? ஐயாம் வெரி சாரி’ ன்னு விளுந்து கடிச்சிட்டாரு .

அவருக்கு என்ன.. சொல்ற கடம சொல்லிட்டாரு. கல்யாணம் பண்ண முடியாத நிலம வந்துட்டதால படிக்க அனுப்பப்பட்ட நான், மூத்தவ இருக்க ஏன் இளையவளுக்கு மாப்பிள பாக்குறாங்கன்னு வர மாப்பிள எல்லாம் தட படுது சின்னவளுக்கு. தான் மட்டும் மாட்டிக்கிட்டோமேகிற ஆத்திரத்துல அண்ணன், சொத்து அழியிற வைத்தெரிச்சல்ல வாப்பா, இயலாத அம்மா. இத்தனையும் தாண்டி ஒவ்வொரு மொறக்கும் ஆயிரம் ரூவா அழிச்சு தான் ஒடம்புல சேர்ற கழிவ அகற்றணுங்கிற நெலம. அதுலயும் ஒரு வாரமா சுத்தமா, சொட்டு சொட்டா போறது கூட இல்ல. வயித்த கலக்கி கலக்கி எடம் பொருள் ஏவல் தெரியாம கடுமையான வாத.

வாப்பாவும் பாவம், ஜன்னத்த நெனப்பாகளா என்னிய நெனப்பாகளா. அன்னைக்கி ஒரு நா காலேஜ் போய் வந்து வீட்டு படியேறுரேன் கிறுகிறுன்னு மயக்கம் , சுதாரிச்சு திண்ணையில வாப்பா மெத்த கெடக்குமே ,அங்கன போயிருவோம்டு நெனக்கங்குள்ள விளுந்துட்டேன். வாப்பா ஓடி வந்தெல்லாம் தூக்கல. எப்பவும் அப்புடிதான். பொம்பள புள்ளைகள தொடறதோ, கிட்ட வச்சு பேசுறதோ எல்லாம் பழக்கம் இல்ல. அம்மாட்ட போயி ‘இந்தா இந்த புள்ள ஜீனத் உளுந்து கெடக்கு பாரு’ன்னு கத்துராக . அம்மாவுக்கு வந்துரிச்சி கோவம். என்ன வாரி அள்ளிக்கிட்டு , கத்தித் தீத்துட்டாக. அவுகளும் எம்புட்டு பொறுப்பாக? அண்ணி தான் சமாதானம் செஞ்சுச்சு.

***********************************************************************************************************************

ஒரு வழியா த்ரூ பஸ் ஏறியாச்சு. இப்பவும் ஜன்னலோரம் சீட் தான். இப்ப கொஞ்சம் பரவால்ல. மூச்சு முட்டல் கொறஞ்சு, அப்புடியே காத்துல சொகமா தூக்கம். அர மணி போயிருக்கும், வயித்த கலக்க ஆரம்பிச்சிருச்சு…எம்புட்டு தான் அடக்குவேன் நானும்..அண்ணிக்கு சங்கடமாப் போகுமேன்னு ரொம்ப நேரம் வரையும் சொல்லவேயில்ல. பாவம் அதுவும் என்ன செய்யும்? ஊர் நெருங்க நெருங்க அவஸ்த தாங்கல எனக்கு. அல்லா அல்லான்னு அனத்திக்கிட்டே வாரேன். எப்பவும் போல எனக்கு ஆராட்டியமா வருது போலன்னு அண்ணி ஓதிக்கிட்டே வருது.

வீடு நெருங்கிடிச்சு  …….. அண்ணா திடல் ஸ்டாப்புல எங்க வீட்டுக்கு எதிரவே நிப்பாட்டிட்டான் பஸ்ஸ .

அம்மாடீஈஈ…. உசுர கையில புடிச்சிக்கிட்டு ஓடுறேன். ஒண்ணும் புரியாம அண்ணி பெறயே வருது. வயசுக்கு வந்த புள்ளைக இப்புடி புர்காவோட தெருவுல ஓடுறது பாக்க முடியாத காட்சி எங்க ஊர்ல. அடிச்சு தள்ளி கதவ தொறந்து, கொல்லக்கி ஓடுறேன்…

திட்டுவோமா வேணாமான்னு அதிர்ச்சியா பாக்குறாக வாப்பா…

..ஷஹி..

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>