Sep 012010
“இன்றோடு
எல்லாம் முடிந்தது”
எனக்குள் நான்
எத்தனை முறை சொன்னாலும்
இன்றோடு
எல்லாமே முடியாது!
உனை தூரத்தில் பார்த்தாலே
பரபரப்பில் படபடக்கும்
பாவி நெஞ்சு
நாளையும் படபடக்கும்!
நிச்சயமாய் துடிதுடிக்கும்!
நீ வருகின்ற வழிபார்த்து
ஏங்குகின்ற இரு விழிகள்
நாளையும் உனைப் பார்க்கும்! எனைக்
கேளாமல் திசை திரும்பும்!
நீ சிரித்த சிரிப்புகள்
எனக்குத்தான் சொந்தமென்று
எத்தனையோ முறை எண்ணி
ஏமாந்த என் மனது
நாளைக்கும் ஏமாறும்!
உண்மை ஏற்கத் தடுமாறும்!
தனியாய் நான் திரிந்த போதும்
உனைவிட்டு வெகுதூரம்
தள்ளி நான் இருந்த போதும்
நீ பக்கத்தில் இருப்பதாக
நிதம் சொல்லும் உள்ளுணர்வு
நாளைக்கும் அதைச் சொல்லும்
நான் மறுத்தால் கவலை கொள்ளும்!
இன்றோடு
எல்லாமே முடியாது!
காதலைப் புதைப்பதற்கு
“நல்ல நாள்” கிடையாதுதான்!
ஆனால்
ஒரே நாள் போதாது!
அதனால் தான்….
இன்றோடு
எல்லாமே முடியாது!
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments