/* ]]> */
Jun 162011
 

குஜ்ஜார் திருமணம் - பெண்கள் ஏலம்

 

 

திருமணங்கள் சொர்கத்தில் நிச்சயிக்கப்படுவதாகவா சொல்கிறீர்கள்? இதோ, இங்கே சந்தையில் விற்கப்படுகின்றன என்பதை நம்புவீர்களா? வேண்டிய பொருட்களை விலை கொடுத்து வாங்குவதுபோல மணப்பெண்ணை விலைக்கு வாங்கும் மாறுபட்ட கலாச்சார விழாவின் பெயர் ‘குஜ்ஜார் திருமணம்’. மராட்டியம், ராஜஸ்தான் , உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கிடையே இந்த விற்பனை நடக்கிறது. இங்கே மணப் பெண்கள் விற்கப்படுகிறார்கள். ஆனால், குஜராத்தில்தான் இது அதிகம் நடைபெறுகிறது. கர்நாடகாவில் வட மாவட்டங்களிலும் வெகுவாக பரவி இருக்கிறது. இப்படி விலைபோகும் பெண்கள் பெரும்பாலும் ஏழ்மையானவர்கள், குடும்பத்தால் கைவிடப்பட்டவர்கள், விதவைகள், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என ஏதாவது ஒன்றைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். இந்தத் திருமணத்துக்கு அழைப்பிதழ் அடித்து ஊரைக் கூட்டி விருந்து வைப்பது கிடையாது. மணமகளின் பெற்றோர் மட்டும் திருமணத்தில் கலந்துகொள்வார்கள். ஏதாவதொரு மாநிலத்திலிருந்து வரும் மணமகன் ஒரு குறிப்பிட்ட தொகையை பெண்ணின் பெற்றோரிடம் கொடுத்துவிட்டு, பெண்ணைத் திருமணம் செய்துகொள்வார். மணமகளுக்குத் தேவையான நகைகள் உட்பட திருமணச் செலவுகள் அத்தனையும் மணமகன் ஏற்றுக்கொள்வார். இரவு திருமணம் முடிந்தால், மறுநாள் புதுப்பெண்ணை மணமகன் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று விடுவார். குஜ்ஜார் திருமணத்தில் பெண்ணின் அழகு, வயது ஆகியவற்றை வைத்து விலை பேசப்படுகின்றது. 18 வயதுக்கு உட்பட்ட பெண்களின் விலை ரூ 1 லட்சம் முதல் ரெண்டு லட்சம்வரை. விதவை அல்லது புறக்கணிக்கப்பட்ட பெண்களின் விலை ரூ 50,000க்கும் குறைவு. சிலருக்கு ரூ10,000க்கும் குறைவாகக்கூடக் கொடுப்பார்கள். கர்நாடக மேம்பாட்டு சேவைகள் செயல் இயக்குனர் பங்கஜா கே. கமல்நாத் கூறுகையில் ” குஜ்ஜார் திருமணம் செய்யும் பெண்களில் பலர் எச்.ஐ.வி. பாதிப்புக்கு ஆளானவர்கள்.லாட்ஜ், சாலையோர கடைகள் மற்றும் தெருக்களில் ‘செக்ஸ்’ தொழிலில் ஈடுபடும் 1200 பேருக்கு பரிசோதனை செய்தபோது, எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களில் பலர் குஜ்ஜார் திருமணம் செய்தவர்கள் என்று தெரிந்தது இவ்வாறு திருமணம் செய்துகொள்ளும் பெண்கள் 2,3 ஆண்டுகள் கழித்து ‘செக்ஸ்’ தொழிலில் ஈடுபடுத்த விற்கப்படுவதாகவும் சொல்கிறார்கள்.” என்றார். பிற்பட்ட கிராமங்களில் இது செல்வாக்கான தொழிலாக விளங்குவதாகவும, போதிய கல்வியறிவு- விழிப்புணர்வு இல்லாமையே இதற்குக் காரணமாகச் சொல்லப்படுகின்றது. பணத்தைப் பிரிப்பதில் பெண்ணின் பெற்றோருக்கும் ஏஜெண்டுகளுக்கும் பிரச்சினை ஏற்படும்போதுதான் இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வருகிறது என்று போலீஸார் தெரிவிக்கிறார்கள். குஜ்ஜார் திருமணத்தில் சம்பந்தப்பட்டவர்கள் புகார் செய்யாமல் எவ்வித நடவடிக்கையும் எடுக்கமுடியாது, என்கிறார்கள். போலீஸார் வழக்கு பதிவு செய்தாலும், போதிய சாட்சிகள் இல்லாமல் வழக்கு தோல்வியைத் தழுவுகிறது. எனவே இந்தப் பிரச்சினையை ஒழிக்க புதிய சட்டம் கொண்டுவரவேண்டியது அவசியம். பெண்களுக்கு சம அந்தஸ்து கேட்கும் காலத்திலும் இப்படிப்பட்ட கொடுமைகளை நடக்கவிடலாமா சமூக அமைப்புகள்? அரசு இதனைக் கவனத்தில் கொள்ளாவிட்டால், கலாச்சார சீரழிவும் ஏற்படக் காரணமாகிவிடுவார்கள்

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

Sorry, the comment form is closed at this time.