/* ]]> */
Jan 212011
 

அம்பை வரலாற்றில் எம்.ஏ பட்டமும் அமெரிக்கன் ஸ்டடிஸில் முனைவர் பட்டமும் பெற்றவர். தமிழ் ,ஆங்கிலம், இந்தி மற்றும் கன்னடத்தில் புலமை பெற்றவர் . இவரது இயற்பெயர் சீ.எஸ் லெட்சுமி என்பது. பிறந்தது கோயம்புத்தூரில் வருடம் 1944. The Economic and Political Weekly, The Times Of India ,Free Press Bulletin ,The Hindu – எழுதி வருகிறார். Sparrow என்ற அமைப்பின் இயக்குநர். ‘தங்கராஜ் எங்கே ‘சிறுவர் திரைப்படத்திற்கு வசனம் எழுதியுள்ளார் . ‘முதல் அத்தியாயம்’ என்ற சிறுகதையைத் திரைபடமாகத் தயாரித்துள்ளார். சிறகுகள் முறியும், வீட்டின் மூலையில் ஒரு சமையல் அறை, காட்டில் ஒரு மான் ,அந்தி மாலை ஆகியன இவருடைய புகழ் பெற்ற படைப்புகளில் சில.

அவருடைய சிறுகதைத் தொகுப்பில் உள்ள நாடகம் “பயங்கள்” என்ற தலைப்பிலானது, அது பற்றி…

மூன்றே கதாபாத்திரங்கள், அஞ்சலி, மனோகர் மற்றும் சேகர். மிக வித்தியாசமான கதைக்களன், கதாநாயகி அஞ்சலியின் கணவன் மனோ impotent அதாவது ஆண்மையற்றவன் , அஞ்சலி திருமணத்துக்கு முன்பே சேகர் என்ற மணமான நபருடன் தொடர்பு கொண்டிருந்த பெண், இவர்களை மட்டுமே சுற்றி நகர்கிறது நாடகம்.

துவக்கக் காட்சியியே அன்றிரவும் தன்னுடைய இயலாமையை இயம்பும் ஒன்றாகிப் போனது பற்றின ஆதங்கத்தில் மனோவும், அவனைத் தேற்றும் விதமாக பேசும் அஞ்சலியுமாக விரிகிறது. அவ்வாறான சந்தர்ப்பத்தில் எத்தகைய தோல்வி மனப்பான்மையும், கோபமும் ஒரு ஆணின் மனதில் மேலோங்கியிருக்கும் என்று அழகாகச் சித்தரிக்கின்றார் அம்பை. அதே சமயத்தில் குரூரம் தெரிக்கும் வார்த்தைகளால் அஞ்சலியைக் காயப்படுத்தவும் அவன் தவறவில்லை. தன்னால் அவளுக்குத் தரவியலாத இன்பங்களை, காதலன் சேகரிடம் அவள் அனுபவித்திருப்பாளோ என்ற எரிச்சலும் குற்றணர்வும் கொண்டு பொங்குகின்றான் மனோ. அவன் சமாதானம் அடையும் விதமாக ,எப்போதும் விளையாடும் ,பாதிரியார்— பாவ மன்னிப்புக் கோர வரும் பெண் ,என்ற பாத்திரங்களோடான கற்பனை விளையாட்டை இருவரும் விளையாடுகிறார்கள். விளையாட்டின் ஊடாகவே இருவரின் மனோபாவங்களை வாசகர்களுக்குத் தெரிவிக்கின்றார் அம்பை.

தற்கொலை செய்து கொள்ளக் கூடத்தெரியாத அப்பாவியான மனோவும், சாக வழிகளும் வாழ்வில் துயரங்களும் இருந்த போதிலும் வாழ விரும்பின அஞ்சலியுமாக அவர்கள் கடந்த காலம் நம் கண் முன் விரிகிறது. ஊடாகவே மனோவின் தாய் பற்றின குறிப்பும் வருகிறது…அவளுடைய அரூபமான இருப்பு மனோவை எத்துணை தூரம் ஆட்டிப் படைக்கின்றது என்று வாசகனுக்குச் சொல்லும் விதமாக. மனோ மன நல மருத்துவர் ஒருவரிடம் சிகிச்சை எடுத்துக் கொள்ளும் தகவலும் உள்ளது.

இரண்டாவது காட்சியில் அஞ்சலியின் முன்னாள் காதலன், தனக்கு வரவிருந்த உயர் பதவிக்கு அவளால் ஏதும் தடை வந்து விடுமோ என்ற பயத்தில் அஞ்சலியை உதறின சேகர்..அவளைத் தேடி வருகிறான்..இயல்பாக அவனை வரவேற்று உபசரிக்கிறாள் அஞ்சலி. அவள்  கணவன் ஆண்மையற்றவன் என்பதை அறிந்து கொண்டதோடு ,அவளிடம் மீண்டும் ஓர் உறவை வேண்டி வந்திருக்கிறான் என்பதை அறிந்தும் அழகாக நிலைமையை எதிர்கொள்கிறாள் அஞ்சலி.  ஓர் சின்னப் பெண்ணின் கதையைச்சொல்வதாக ஆரம்பித்து , வாசகனுக்குத் தன் இளம் பிராயம் பற்றி சொல்வதோடு… அன்பு, காதல் போன்றவை குறித்த தன்னுடைய நிலைப்பாட்டை தெளிவாக, பதட்டமில்லா வார்த்தைகளில் சேகருக்குத் தெரிவிக்கின்றாள் . கடைசியாக தான் அவனுடன் சிநேகமாக இருப்பதில் எந்தத் தடையும் இல்லை என்பதோடு அதற்கும் மேல் அவனுக்கு ஓர் உறவு தேவைப்பட்டால் அதற்கு அவன் விலைமகளிரை நாடுவது தான் சரியாக இருக்கும் என்றும் முடிக்கிறாள். தன் தோல்வியை ஒப்பி திரும்பிச் செல்கிறான் சேகர். தொடர்ந்து மனோ சேகரின் வருகையின் நோக்கம் குறித்து வினவ, உண்மையைச் சொல்கிறாள் அஞ்சலி.

எதன் பொருட்டு அவள் அவன் வேண்டின உறவை மறுத்தாள் என்ற கேள்விக்கு…… மனோவின் துணை தனக்குத் தேவைப்படுவதால் என்று அஞ்சலி சொல்ல நிறைகிறது.

பெண்ணியப் பிரதிநிதியாக அஞ்சலி:

1. அசாதாரணமான புத்தி கூர்மையும், தெளிவான சிந்தனையும் கொண்டவளாகச் சித்தரிக்கப்பட்டிருக்கின்றாள்.

2. பதட்டமில்லாத செயல்பாடுகள், ஆணித்தரமான கருத்துக்கள்

3. பெண்ணியவாதி என்றாலே.. பொறுமைக்கும், அமைதிக்கும் அவர்களிடம் இடமில்லை என்ற கருத்தை உடைத்து, மனோநிலையில் பல மாற்றங்களை வெளிப்படுத்தும் கணவனை பொறுமையாகக் கையாளும் தன்மை.

4. தான் பரிசுத்தமானவள் என்று நம்பும் திடம்

5. அழகுணர்ச்சியும், நகைச்சுவையும் கொண்டவள் ,அதோடு வாழ்வு பற்றின ஆசையும் கனவுகலும் கொண்டவள் தான் இன்றைய பெண் என்பதும் அவளுடைய அறையலங்காரத்தின் வர்ணனைகளில் இருந்தும், அவளுடைய பேச்சிலிருந்தும் தெரியப்படுத்தப்படுகிறது.

6. மேலும்…தன்னுடைய பயங்களை, பாதுக்காப்பற்ற  உணர்வை ஒப்புக்கொள்ளும் தைரியம் உள்ளவளாகவும் சித்தரிக்கப்பட்டு  பெண்ணியத்தின் சாரமாக படைக்கப்பட்டிருக்கின்றாள்.

மனோ :

இருட்டுக்கும், அலுவலகக் கூட்டத்தில் பேசவும் கூடப் பயப்படும் ஆண். தன் தாயின் அன்புக்கு முற்றிலும் கட்டுப்பட்டு, ஒவ்வொரு செயல்பாட்டுக்கும் அவளை எதிர்பார்த்து வளர்க்கப்பட்டதாலேயே கோழையானானோ என்று நினைக்க வைக்கிறான். அதே சமயம் தன் மனநிலை மாறுபாடுகளைத் தாண்டி, அஞ்சலியை முழுமனதோடு ஏற்றுக் கொண்டவன் என்பது அவளோடான அவனுடைய உரையாடல்கள் மூலம் விளங்குகிறது. மனிதத்தன்மை உள்ளவன் தன் கணவன் என்று அஞ்சலி சேகரை மறுக்கும் போது கூறும் வசனம் இதைத் தெளிவு செய்கிறது.

சேகர்:

ஆணாதிக்க சிந்தனையின் மொத்த உரு. தன் மனைவி வியாதியஸ்தி என்பதால் சுகத்துக்காக அஞ்சலி என்ற இளம் பெண்ணை , கன்னியைத் தெரிவு செய்து கொண்ட சுயநலவாதி. இயல்பான உடல் இச்சைகள் மனைவியின் மூலம் தீர வழியில்லை எனும் போது தான் திருமணம் ஆனவனாக இருந்தாலும் ஒரு கன்னி virgin தான் வேண்டும் என்று நினைத்த ஆணாதிக்க சமூகத்தின் பிரதிநிதி. தனக்கான உயர் பதவிக்கு பங்கம் வந்து விடுமோ என்ற பயத்தில் அஞ்சலியை நீங்கியவன், அவள் திருமணமானவள் என்ற அடையாளமே மீண்டும் தங்கள் உறவைப் புதுப்பித்துக் கொள்ள நல்ல ஓர் license என்று நினைக்கும் கயவன். துணிந்து மீண்டும் என்னிடம் வந்து விடு என்று வேண்டுகோள் விடுக்கும் போது ஒட்டு மொத்த பெண் இனத்தின் ஆத்திரத்தையும் தேடிக்கொள்ளும் முட்டாள்.

ஆசிரியை:

அம்பையின் பெண்ணிய சிந்தனையின் ஒரு சோறு பதம் ரகம் இந்த நாடகம். ஆணை வெறுத்து, அவன் இருப்பை நிராகரித்து, அவனில்லாமல் வாழத் தலைப்படும்  எண்ணம் அல்ல பெண்ணியவாதம் என்பதை ஆணித்தரமாகப் பதிவு செய்கிறார் அம்பை.

தமிழ் சினிமாக்களிலும், கதைகளிலும் சித்தரிக்கப்படும் சராசரி கதாநாயகிகள் பற்றின இவரது கிண்டல் இந்த நாடகத்திலும் வெகு இயல்பாக  உள்ளது. சினிமாவில் அஞ்சலி நடிக்கலாம் என்று சாடிஸ்டிக்காக சேகர் கூறுமிடம் ” இன்னும் சின்னவாளா heroes வரட்டும். நான் கட்டாயமா apply பண்றேன்” என்னுமிடமாகட்டும்  “இந்த மாதிரியான ஹீரோயினுக்கு  ஹீரோவோட கையைப் பிடிச்சுண்டாலே orgasm வந்துடுமாம். அப்படின்னா அவனை kiss பண்ணினா காக்காய் வலிப்பே வந்துடும் இல்லையா?”  என்பதிலும் “sorry. virgin ஹீரோயின்ஸ் உனக்குப் பிடிக்கும்கறது மறந்து போயிடுத்து” “எனைமறந்ததேன் நெஞ்சமே ” அப்படின்னு பாடிண்டிருப்பேன்னு கற்பனை பண்ணினியா? எனும் இடங்களிலும் சபாஷ் என்று நமை மறந்து சிலாகிக்க வைக்கிறார் அம்பை. கதை எழுதப்பட்ட காலம் ஜூன் 1972 என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய முக்கிய அம்சம்.

கதையின் ஓட்டத்தில் அஞ்சலியும் மனோவும் மது அருந்துகிறார்கள் என்பதும் நாயகி திருமணத்துக்கு முன்பே ஒருவனோடு தொடர்பு கொண்டிருந்தவள் என்பதும் தனிப்பட்ட மனித சுதந்திரம் என்றெண்ணும் விதமாக எழுதப்பட்டு உள்ளது..அதோடு அன்றைய காலமாற்றத்தின் ஓர் பதிவாகவும் கொள்ளப்பட வேண்டியது.  மட்டுமல்லாமல் …பெண் மற்றும் மனித வாழ்வின் பயங்கள், பாதுகாப்பற்ற உணர்வு இவையெல்லாம் இருபாலருக்கும் ஒன்றே தான் என்பதையும் பெண்  தன்  துணையாக, தோழனாக, சக உயிரினமாகவே ஆணை விரும்புகிறாள் என்பதோடு அம்மாதிரியான பாதுகாப்பை அளிக்கும் மனிதனைத் தான்  உடல் இச்சையத் தீர்ப்பவனை விடவும் மேலான ஆண் என்று ஒப்புக் கொள்கிறாள், என்ற செய்தியையும் பறைசாற்றுகின்றது அம்பையின் “பயங்கள்”.

…ஷஹி..

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>